300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெப்பு

         சிவகங்கை மாவட்டம் கோவானூரில் உள்ள கண்மாய் கழுங்குமடையில் பழமையான கல்வெட்டுகள் இருப்பதாக, அதே ஊரைச் சேர்ந்த அழகர்சாமி மற்றும் பிரகாஷ் ஆகியோர் அளித்த தகவலின் பேரில், கொல்லங்குடியைச் சேர்ந்த ஆசிரிய பயிற்றுநரும், தொல்லியல் ஆய்வாளருமான புலவர் கா. காளிராசா தலைமையிலான தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.


       இதுகுறித்து புலவர் கா. காளிராசா கூறியது, கோவானூர் கண்மாய் கரையில் 5 கண்களை உடைய கலுங்குமடை உள்ளது. இந்த கழுங்குடை கட்டுமானத்தில் 5 கல்வெட்டுகள் காணப்படுகின்றன.



        அவற்றுள் ஒரு கல்வெட்டைத் தவிர மற்றவைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக தலைகீழாகக் காணப்படுகின்றன. இவை மராமத்துப் பணியின் போது அவ்வாறாக மாற்றப்பட்டிருக்கலாம். அதில் மூன்று கல்வெட்டுகள் நல்ல நிலையிலும், இரண்டு கல்வெட்டுகள் முற்றிலும் சிதைந்த நிலையிலும் காணப்படுகின்றன.


       வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டு துண்டுக் கல்வெட்டை இணைத்துப் படித்த போது சகாப்தம் 1641 அதாவது பொது ஆண்டு 1719க்கு மேல் செல்லா நின்ற விகாரி ஆண்டு தை மாதம் 2ஆம் நாள் முத்தப்பன் சேர்வைக்காரனவர்கள் கட்டி வைத்தது எனவும், வீரபத்திர பிள்ளை வள மணியத்தில் (மணியம் என்ற சொல்லுக்கு நிர்வகித்தல் எனக் கூறப்படுகிறது) தனக்கு காணியாட்சியின் படியினால் இந்த கலுங்கு கட்டி வைத்தது என எழுதப்பட்டுள்ளது.


        இதன்படி, முத்தப்பன் சேர்வைக்காரன் இப்பகுதியில் சேதுபதி காலத்தில் அரசப் பிரதிநிதியாக இருந்திருக்கலாம். வீரபத்திர பிள்ளை மணியத்தில் இம்மடை கட்டப்பட்டிருக்கலாம். மேலும், மற்றொரு கல்வெட்டில் குடும்பன் மகன் குடும்பன். குடும்பன் மகன் குடும்பன் என அடுத்தடுத்து வருகிறது. ஆகவே குடும்பம் இன மக்கள் இம்மடையில் நீர் திறத்தல், அடைத்தல், வயல் வெளிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற பணிகளைச் செய்து தொடர்ந்து பராமரித்து வர நியமிக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.


        இதேபோன்று, மற்றொரு கல்வெட்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலான கல்வெட்டில் வரி செலுத்துவது தொடர்பான செய்திகள் முழுமையாக இல்லாமல் உள்ளது


       இவைதவிர, இந்த கலுங்குமடையில் தண்ணீர் வடியும் பகுதியிலிருந்து 600 மீட்டர் தூரத்தில் முதுமக்கள் தாழி புதைந்து இருந்ததற்கான எச்சங்கள் தென்படுகின்றன. அதே பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் உள்ள கல்வெட்டில் கோயில் கட்டமைப்புக்கான வரைபடம் உள்ளது.


       இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கோவானூர் ஊருணி படித்துறையில் பாண்டியார் காலக் கல்வெட்டு, அதே பகுதியில் குமிழி மடைத் தூண், சேதுபதி காலக் கல்வெட்டு, அதைத் தொடர்ந்து, தற்போது 300 ஆண்டுகள் பழமையான கலுங்கு மடை கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.


      எனவே, இந்த பகுதியில் பாண்டியர் காலத்தில் மிகப் பழமையான சிவாலயம் இருந்திருக்க வேண்டும். நாளடைவில் ஏற்பட்ட மாற்றங்களினால் சிதைவுற்று, அந்த கோயிலில் உள்ள கற்கள் பரவலாக இந்த பகுதியில் நடைபெற்ற கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்றார்.