சிவகங்கை,
விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர்கள் வாட்ஸ்அப் குழு அமைத்து பசியால் வாடும் ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட ராணுவ வீரர்கள் வாட்ஸ்அப் குழு மூலம் வைகை பட்டாளம் என அமைப்பினை ஏற்படுத்தி, ஏழை எளிய பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே நிலைகுலைந்து நிற்கிறது. இந்த வைரஸை அழிக்க நேரடியாக மருந்துகள் இல்லாததால், சமூக விலகல் மட்டுமே தீர்வாக இருக்கிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்த ஊரடங்கால் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், நாடோடிகள், பழங்குடி மக்கள் மிகப்பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அன்றாட உணவே அவர்களுக்குக் கேள்விக்குறியாகியுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள திட்டங்கள் இந்த மக்களைப் பெரிய அளவில் சென்று சேரவில்லை. இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் பல்வேறு இடங்களில் தங்களால் இயன்ற உதவியினை சிறப்பாக செய்துவருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ராணுவ வீரர்கள் 150க்கும் மேற்பட்டோர் வாட்ஸ்அப் மூலம் ஒன்றாக இணைந்து பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக வைகை பட்டாளம் என்ற அமைப்பினை உருவாக்கி உள்ளனர்.
இவர்கள் முதல் கட்டமாக இளையாங்குடி மானாமதுரை தாலுகாவுக்கு உட்பட்ட தாயமங்கலம், சன்னதிப்புதுக்குளம், கங்கையம்மன் குடியிருப்பு பகுதியில் உள்ள 115 ஏழைய குடும்பங்களுக்கு, இராணுவ வீரர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர். மானாமதுரை டி.எஸ்.பி., கார்த்திகேயன், அப்பகுதி மருத்துவர்களை கொண்டு கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூக இடைவெளியுடன் ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்கள். நாட்டிற்காக ராணுவத்தில் சேவையாற்றி பொது மக்களைக் காக்கும் ராணுவ வீரர்கள், விடுமுறையில் வந்த போதும் வாட்ஸப் மூலம் இணைந்து ஏழை எளிய மக்களை கண்டறிந்து இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்துவரும் இவர்களது சேவை அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது.