சமீப காலமாக “நவீன அடிமைத்தனம்” என்கிற சொல் அதிக பயன்பாட்டில் உள்ளது. இதில் கட்டாய உடல் உழைப்பு, கட்டாய திருமணம், கொத்தடிமை, பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுத்துல் உட்பட குழந்தை கடத்தல் போன்றவை அடங்கும். உள்நாட்டு போர் மற்றும் தேசிய அளவிலான பேரிடர் போன்றவற்றிற்கும் குழந்தைகள் கடத்தப்படுதலுக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. கோவிட்19 போன்ற உலக அளவிலான ஊரடங்கின் போது பல்வேறு காரணங்களுக்காக “குழந்தை கடத்தல்" என்பது முழு அளவிலான ஓட்டத்தில் தொடர்வதை நம்மால் காண முடிகிறது.
இந்த கோவிட்19 காலகட்டத்தில், பச்பன் பச்சாவ் அந்தோலன் (BBA) என்ற குழந்தை பாதுகாப்பு அமைப்பு சுமார் 350 க்கும் மேற்பட்ட குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை பல்வேறு தொழில்களிலிருந்து மாநில காவல் துறை மற்றும் பிற அரசு துறை உதவியுடன் மீட்டனர். மனித உரிமை மீறல்களில், ஆயுதம் மற்றும் போதைப் பொருட்களின் வர்த்தகத்திற்கு பிறகு மூன்றாவது மிகப்பெரிய குற்றம் “மனிதக் கடத்தல்கள்" ஆகும். ஐக்கிய நாடுகளின் வரையறைப்படி பார்த்தால் ஆள்/மனிதக் கடத்தல் என்பது ஒரு நபர் மீதான ஒப்பந்தங்களை செய்வது, அச்சுறுத்தி அல்லது கட்டாயப்படுத்தி ஒருவரை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திருப்பது என்பதாகும்.
“கடத்தல்" என்பது தேவை அடிப்படையில் சந்தை சார்ந்த தொழிலாக உள்ளது. இது நன்கு திட்டமிட்ட குற்றச் செயலாகும். கோவிட்19 போன்ற பேரிடர் காலங்களிலும், சமூக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களையும்; சரியான பராமரிப்பு ஆதரவற்ற குடும்பத்தினர் மற்றும் பிற நபர்களின் உந்துதல்களாலும் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள் மிக சுலபமாக கடத்தல் என்னும் வணிகத்துக்கு இரையாக்கப்படுகிறார்கள். இவர்கள் இடைத்தரகர்களால் யாரால் பணம் கொடுக்கப்படுகிறதோ அவர்களுக்காக மாநிலங்களுக்குள்ளோ, இடையிலோ அல்லது அண்டை நாடுகளுக்கோ மலிவான உழைப்பை தேடும் முதலாளிகளுக்கு விற்கப்படுகிறார்கள். காரணிகள்: மோசமான பொருளாதார வளர்ச்சி; பாலின் ஏற்றத்தாழ்வு விகிதம்; அரசியல் ஸ்திரத்தன்னை மற்றும் வேலை வாய்ப்புகள் இல்லாமை போன்ற காரணிகள் மனித கடத்தலை உருவாக்குவதற்கான சில மிக முக்கிய எடுத்துக்காட்டுகள். கடத்தலுக்கான காரணங்கள்: ஆசிய கண்டத்தில் இந்தியா மனிதக் கடத்தலின் மிக முக்கியமான மையமாக திகழ்கிறது. பெரும்பாலும் இங்கு பெண்களும், குழந்தைகளுமே பாலியல் தொழிலுக்காகவும், ஆபாசப் படங்கள் மற்றும் கட்டாய உடல் உழைப்பு மற்றும் கட்டாய திருமணத்திற்காக கடத்தப்படுகிறார்கள். மட்டுமின்றி, குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதற்கும் வீட்டு வேலை செய்வதற்கும் விவசாயம் விவசாயம் சார்ந்த (ஆடு, மாடு, வாத்து மேய்த்தல்) தொழில்களில் ஈடுபடுத்தவும், சட்ட விரோத தத்தெடுப்பதற்கும் கடத்தப்பட்டு விற்கப்படுகிறார்கள். மேலும் உடலுறுப்பு கொள்ளையும் இந்த குழந்தைகள் மீது நடந்தேறுகின்றன. மட்டுமின்றி விபசார தொழிலில் ஈடுபடுத்தப்படுவதற்காக கடத்தப்பட்ட குழந்தைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. இவ்வாறு கடத்தப்படுவர்கள் அவர்கள் சம்மதத்துடனோ அல்லது சம்மதமில்லமலோ நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு போதும் தான் “சுரண்டப்படுவதை" விரும்புவதில்லை.
சில நேரங்களில், குழந்தைகள் இடைத்தரகர்களின் சூழ்ச்சியால் கவரப்பட்டு சூழ்நிலையின் காரணமாக தாமாக முன்வந்திருக்கலாம். ஆனால் இறுதியில் அவர்கள் வற்புறுத்தப்பட்டு, மோசடி செய்து ஏமாற்றப்பட்டு பல்வேறு விதமான சுரண்டலுக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை . சட்ட விரோத தத்தெடுப்பு: “சட்ட விரோத தத்தெடுப்பு” வணிகத்தை அதிகரிக்க குழந்தைகள் அதிகளவில் கடத்தப்படுகின்றன.
குழந்தைகளை திருடி போலியான பதிவுகளை தயார் செய்து அக்குழந்தை அனாதை/ஆதரவற்றது சட்டப்படி தத்தெடுக்க உகந்தது என சில சட்டவிரோத தத்தெடுப்பு மையத்தாலும் முகவர்களாலும் அறிக்கை தயார் செய்து சத்தமின்றி நிகழ்த்தப்படுகின்றன. ஓர் ஆண்டிற்கு முன்பு, தேசிய சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCP- CR) நடத்திய விசாரணையில் ராஞ்சியில் உள்ள “மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டி” சட்ட விரோதமாக குழந்தைகளை தத்தெடுத்தது தெரிய வந்தது. திருமணமாகாத தாய்மார்களுக்காக "நிர்மல் ஹரிடே” என்ற பெயரில் இந்த இல்லமானது நிறுவப்பட்டது.
பல ஆண்டுகளாக அங்கு சட்டவிரோத தத்தெடுப்பு நடவடிக்கைகள் நடந்து வருவது கண்டறியப்பட்டது. சட்ட விரோதமாக தத்து கொடுக்கப்பட்ட நான்கு குழந்தைகளை போலிசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து 58 வழக்குகள் விசாரணையின் கீழ் வந்தன. கடத்தலின் மற்றுமொரு பயமுறுத்தும் அம்சம் கடினமான கால சூழ்நிலைகளில் மக்களை சுரண்டுவது. குறிப்பாக குழந்தைகளை உள்நாட்டு போர் அல்லது தேசிய அளவிலான பேரிடர் காலங்களில் அதிக பாதிப்புக்குள்ளாக்குவது. பிபிசி (BBC) அறிக்கையின் படி ஷமிம் (பெயர் மாற்றப்பட்டது) என்ற 14 வயது சிறுமி தனது குடும்பத்தினர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பின்னர் உயிருக்கு பயந்து மியான்மரிலிருந்து பங்களா தேஷூக்கு தப்பிச் செல்ல முயன்றாள். (அவரே விவரித்தார்) அப்பொழுது செல்லும் வழியில் சில பெண்கள் காரில் வந்தனர். அவர்கள் என்னை தங்களுடன் வருமாறு அழைத்தனர். நானும் சம்மதித்து அவர்களோடு காரில் சென்றேன். நான் ஒரு புதிய வாழ்க்கைக்கு பாதுகாப்பான பயணமாகவே அதை கருதினேன். ஆனால் விதி, அவர்கள் என்னை அருகிலுள்ள "காக்ஸ் பஜார்" என்ற நகருக்கு அழைத்துச் சென்றனர்.
அதன்பிறகு அவர்கள் இரண்டு இளைஞர்களை என்னிடம் அழைத்து வந்தார்கள். அவ்விரு இளைஞர்களும் எனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தார்கள். நான் ஒத்துழைக்காததால் அவர்கள் என் வயிற்றில் கத்தியால் குத்தினார்கள் தொடர்ந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்றார். ஆக, கடத்தலுக்கான மூல காரணத்தை நிவர்த்தி செய்ய போதுமான கவனம் செலுத்தப்படாதது துரதிர்ஷ்ட வசமானது. உதாரணமாக, கட்டாய உழைப்புக்கான கடத்தல் மிகவும் பொதுவானது. கடத்தல்காரர்கள் மோசமான பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரிவினரையும் தீவிரமாக வேலை தேடுவோரையும் குறிவைக்கின்றனர். முதலில் இது பாதுகாப்பற்ற இடம்பெயர்விலிருந்து முடிவில் கடத்தலுக்கு வழிவகுக்கிறது.
இன்று கடத்தலின் தன்மைகள் மற்றும் பாதுகாப்பற்ற புலம் பெயர்வு பற்றி குழந்தைகளுக்கு தெரியப்படுத்த எந்தவொரு தடுப்பு நடவடிக்கைகளும் இல்லை . மேலும், இந்தியாவின் சட்ட அமைப்பு குழந்தைகளை வணிக ரீதியாக சுரண்டுவதற்கு எதிராக போதுமான மற்றும் பயனுள்ள தடுப்பை உருவாக்கவில்லை . குழந்தைகளை சுரண்டுபவர்களுக்கும், துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தான் இத்தகைய தடுப்பு சாத்தியமாகும். கடத்தலை தடுப்பதற்கும் கட்டுபடுத்துவதற்கும் மிக சொற்ப அளவிலான வழிமுறைகளும், நடவடிக்கைகளும், திட்டங்களுமே உள்ளன. கடத்தலால் ஏற்படும் பல பரிமாண பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அவை போதுமானதாக இல்லை. குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களின் மறு வாழ்வு தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.
இது தடுப்பு நடவடிக்கைகளின் தேவையை நிவர்த்தி செய்யவில்லை அல்லது உடனடியான புனர்வாழ்வு மற்றும் மறு ஒருங்கிணைப்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதில்லை. கடத்தலின் பரவலைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக அதன் நாடு கடந்த பன்முகத் தன்மையைக் கருத்தில் கொண்டு, கடத்தலின் அனைத்து அம்சங்களையும் கையாள்வதற்கு ஒரு விரிவான சட்டத்தின் தேவை உள்ளது.
இதில் நன்கு பொருத்தப்பட்ட குற்றவியல் நீதி அமைப்பு மற்றும் மாவட்ட அளவிலிருந்து தேசிய மட்டம் வரை யிலான புனர்வாழ்வு நெறிமுறை, கடத்தல் தடுப்பு செயல்பாடு, கால வரையறை விசாரணை துரித வழக்கு நடவடிக்கை மறுவாழ்வு மற்றும் மறு ஒருங்கிணைப்பு “பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சி” இருவருக்குமான பாதுகாப்பை வழங்குதல் அதற்கான நெறிமுறைகள் உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் கடத்தலை தடுக்கவும் மற்றும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிட வேண்டும்.